Friday, January 18, 2013

இயக்குனர் பாலாவை பற்றி


 பாலா மதுரையில் 1966 ம் ஆண்டு பிறந்தவர்.மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றவர்.தமிழ் திரை உலகின் ஜாம்பவான் பாலுமகேந்திரா அவர்களிடம் துணை இயக்குனராக சேர்ந்து,திரைக்கலை பயின்றவர்.

சேது திரைப்படம் மூலம் தனது திரை பயணத்தை துவக்கிய பாலா அவர்கள்,இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளார்.பாலாவின் திரைப்படங்கள் இதுவரை தேசிய விருதுகள்,பிலிம் பேர் விருதுகள்,தமிழக அரசு விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளன.
பாலாவின் முதல் மூன்று திரைப்படங்கள் 13 பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளன.அவற்றில் பிதாமகன் மட்டும் 6 விருதுகளை பெற்றுள்ளது.

நான்காவது படமான "நான் கடவுள்" இரண்டு தேசிய விருதுகள்,மூன்று தமிழக அரசு விருதுகளை பெற்றுள்ளது.இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவை உயர்த்தப்பிடிக்கும் இவரது திரைப்படங்கள் யாதார்த்தமும்,தனித்துவமான அழகியலும் கொண்டவை.சமுதாயத்தின் விளிம்புநிலை மனிதர்களை படம் பிடிப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.வாழ்வியலின் எதார்த்தங்களை இவர் சொல்லும் அழகே தனியானது.இவருடைய ஒவ்வொரு திரைப்படமும் சினிமா பார்க்கும் ரசிகனை ஆழ்ந்து சிந்திக்கத்தூண்டும்.

Monday, January 7, 2013

பரதேசி எனக்கு முக்கியமான படம் - ஒளிப்பதிவாளர் செழியன்

கல்லூரி,ரெட்டச்சுழி,தென்மேற்கு பருவக்காற்று,பரதேசி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பவர் செழியன்.அவர்,இயக்குனர் பாலாவுடன் தான் பணியாற்றிய பரதேசி பட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

இயக்குனர் பாலாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

   சின்ன சின்ன விசயங்களையும் நுட்பமாக படமாக்க வேண்டும் என்று நினைக்கும் தரமான இயக்குனர் பாலா.அதற்காக அதிகமாக
 மெனக்கெடுப்பவர்.அதனால் அவருடன் வேலை செய்யும்போது நாமும் ஈடுகொடுத்து அவருக்கு இணையாக வேலை செய்ய
வேண்டும்.அப்போதுதான் அவருடன் பயணிக்க முடியும்.மேலும் 10 வருடங்களாக எனக்கு டைரக்டர் பாலாவுடன் நட்பு இருந்து வருவதால்,அவர் என்ன எதிர்பார்ப்பார் என்கிற புரிதல் என்னிடம் இருந்தது.அதனால் அவருடைய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எனது கேமராவில் சரியாக பதிவு செய்து கொடுத்திருக்கிறேன்.

பரதேசி படத்திற்காக மலைப்பகுதிகளில் அதிக ரிஸ்க் எடுத்து சில காட்சிகள் படமாக்கியதாக கூறப்படுகிறதே?

  ரிஸ்க் என்று எதுவும் இல்லை.ஒரு வேலையை வேண்டா வெறுப்பாக செய்தால்தான் அப்படி தோன்றும்.ஆனால் என்னைக்கேட்டால் ஈடுபாட்டுடன் செய்யும் வேலை எதிலும் ரிஸ்க் என்பது தெரியாது.பரதேசி படத்தின் கதை என்னை வெகுவாக பாதித்த கதை.அதனால் எனது பொறுப்பை உணர்ந்து பணியாற்றினேன்.அதனால் எந்த களைப்பும் தெரியவில்லை.அது மனசுக்கும் திருப்தியாகவே இருந்தது.அந்த வகையில் பாலாவுடன் பரதேசி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனது சினிமா கேரியரில் முக்கியமானதாக இருக்கும்.

பரதேசி படத்தை பொறுத்த மட்டில் என் வேலையை பொறுப்போடும்,நேர்த்தியோடும் செய்தேன்.விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததில்லை.அந்த கதைக்கு என்னென்ன தேவையோ அதை சரியாக செய்திருப்பதாக நினைக்கிறேன்.

சரித்திர கதைகளில் ஒளிப்பதிவாளர்களாக அதிக ஸ்கோர் பண்ண முடியும் என்கிறார்களே,அப்படியா?

  உண்மைதான்.அதோடு,கதை,இயக்குனரைப் பொருத்துதான் அது முடிவாகும்.
மேலும் பரதேசி படம் எனக்கு 1940 களில் நடந்த பீரியட் கதை என்பதால் எனக்கு ஸ்கோர் பண்ணக்கூடிய ஏரியாவாக இருந்தது.இயக்குனரின் ஆளுமை அதிக பக்கபலமாகவும் இருந்தது.உண்மைசம்பவத்தின் அடிப்படையில் உருவான படம் என்பதால் மனித உணர்வுகள்,சம்பவங்கள்,உண்மையான வழி என ஒவ்வொரு பீலையும் கேமரா கண்களுக்குள் கொண்டு வர முடிந்தது.
அந்த வகையில் இந்தப்படம் எனக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேமரா மேன்கள் இயக்குனர்களாகும் சீசன் இது.நீங்கள் எப்படி...?

இப்போது எனது முழுக்கவனமும் ஒளிப்பதிவில்தான் இருக்கிறது.ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக படம் இயக்குவேன்.அப்படி இயக்கும்போது "வீடு",சந்தியாராகம்,அக்ரகாரத்தில் கழுதை போன்று கமர்சியல் நோக்கமில்லாத கதைகளை இயக்குவேன்.

அவரது ஒளிப்பதிவு போலவே அவருடைய பேச்சும் தெளிவாக இருந்த்தது.